search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தைகள் தினம்"

    குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான இன்று ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தையொட்டி, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-  

    குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித் அவர்களின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் - ஒளிச்சுடர்கள்!

    ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள்!

    குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம்.  

    குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழலைப்பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகிக் கற்க துணை நிற்போம்!

    குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்.
    இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
    என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன் என்று குழந்தைகள் தின விழாவில் கமல்ஹாசன் கூறினார். #KamalHaasan #ChildrensDay
    சென்னை:

    நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்னும் பெயரில் கட்சி தொடங்கி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். தமிழகத்தில் உள்ள ஊர்களுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று பேசி வரும் அவர் இன்று குழந்தைகள் தினத்தையொட்டி கதீட்ரல் சாலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் நடந்த குழந்தைகள் தின விழாவில் கலந்துகொண்டார்.

    லிட்டில் பிளவர் மேல் நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் கமல்ஹாசன் பேசியதாவது:-

    நான் இந்த பள்ளிகளுக்கு 37 வருடங்களாக தொடர்புடையவன். ராஜபார்வை படம் எடுக்க இந்த பள்ளி உதவியாக இருந்தது. தன்னம்பிக்கை விடாமுயற்சி அனைத்தும் எனக்கு பாடமாக இருந்தது. நானும் இந்த பள்ளியில் வெளியில் உள்ள மாணவன் என்றால் மிகையாகாது.



    இந்த குழந்தைகளுக்கு இருக்கும் நம்பிக்கை சாதாரண மனிதர்களுக்கு இருந்தால் இந்தியா பல் மடங்கு முன்னேறிவிடும். இந்த முயற்சி பாராட்டப்பட வேண்டியது. இதற்கு ஆசிரியர்களை பாராட்டுகிறேன். இங்கு வந்துசெல்லும் போதெல்லாம் என் மனதை இறுகும் நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. அவர்கள் சந்தோ‌ஷம் தொடரட்டும். இவர்கள் என்னை விட நீண்ட ஆயுள் உடையவர்கள். அவர்கள் வாழ்த்தும்போது என் ஆயுளும் நீளும்.

    ஆட்டத்துடன் சம்பந்தப்பட்டவன் நான். இங்கு நடனம் ஆடிய மாணவர்களுக்கு பாராட்டுக்கள். இங்கு வாழ்த்து பெற வந்தேன். வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி. நான் சினிமாவில் பாடிய பாடல் இன்று எனக்கே நம்பிக்கை அளிக்கக்கூடியதாக மாறியுள்ளது. புத்தகம் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை வைத்திருந்தார்கள். அது விரைவில் அவர்களுக்கு அளிக்கப்படும்.

    புகழ் எனக்கு போதுமான அளவில் கொடுத்துவிட்டீர்கள். தகுதிக்கு அதிகமான புகழை தமிழகம் எனக்கு சேர்த்துள்ளது. இனி தமிழகத்திற்கு புகழ் சேர்க்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். என் எஞ்சிய வாழ்நாள் முழுக்க தமிழகத்துக்கு சேவை செய்யவே அரசியலில் ஈடுபட்டுள்ளேன்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    முன்னதாக விழாவில் மாணவர்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று கமல்ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்து பாடல் பாடினார்கள். கமல் அவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மாணவர்கள் கலை நிகழ்ச்சியில் கமல் நடிப்பில் இடம்பெற்ற உன்னால் முடியும் தம்பி பாடலையும் பாடினார்கள்.

    சக்தி என்னும் மாணவர் கமலிடம் பார்வைத் திறனற்றவர்களுக்கு படிக்க உதவும் பிரெய்லி புத்தகங்களை அச்சிடும் கருவி பழுதாகி விட்டதாகவும் அதனை தங்களுக்கு வாங்கித் தருமாறும் கோரிக்கை விடுத்தார். கமல் அந்த வேண்டுகோளை ஏற்று மும்பையில் இருந்து இறக்குமதி செய்து தருவிப்பேன் என்று உறுதி அளித்தார். #KamalHaasan #ChildrensDay

    குழந்தைகள் தினவிழாவை முன்னிட்டு சென்னை விமான நிலையத்தில் இருந்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் 48 பேர் இலவச விமான பயணம் மேற்கொண்டனர். #JawaharlalNehru #ChildrensDay

    ஆலந்தூர்:

    மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் பிறந்த நாளான நவம்பர் 14-ந் தேதி குழந்தைகள் தின விழாவாக கொண்டாடப்படுகிறது.

    இதையொட்டி சென்னை விமான நிலையம் இன்று இண்டிகோ ஏர்லைன்ஸ் மற்றும் இந்தியன் ஆயில் கார்ப்பரே‌ஷன் ஆகியவற்றுடன் இணைந்து அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கனவு பயணம் என்ற இலவச விமான பயணத்துக்கு ஏற்பாடு செய்திருந்தது.

    இதற்காக விமான நிலையம் அருகே உள்ள அரசு பள்ளிகளில் இருந்து சுமார் 48 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை விமான நிலையத்திற்கு காலை அழைத்துவரப்பட்டனர்.

     


    சென்னையில் இருந்து திருச்சி வரை செல்லும் விமானத்தில் அவர்கள் சுமார் 45 நிமிடம் பயணம் செய்தனர். காலை 9.45 மணிக்கு புறப்பட்டு சென்ற அவர்கள் மீண்டும் 10.30 மணிக்கு சென்னை திரும்பினர்.

    இதில் மாணவர்கள் உற்சாகத்துடனும் ஆச்சரியத்துடனும் பயணம் செய்தனர். #JawaharlalNehru #ChildrensDay

    குழந்தை செல்வங்கள் அனைவருக்கும் தன் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார். #ChildrensDay #TTVDhinakaran
    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகளை மிகவும் நேசித்த பண்டித ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தினமாக கொண்டாடப்படும் இந்நன்னாளில் குழந்தை செல்வங்கள் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

    எம்.ஜி. ஆர். குழந்தைகளின் அறிவுத் தேடலுக்கு, பசி ஒரு தடையாய் இருந்திடக்கூடாது என்பதை உணர்ந்து சத்துணவு திட்டத்தை கொண்டுவந்தார். அம்மா அதனை விரிவுபடுத்தியதோடு, குழந்தைகளுக்கான பல்வேறு நலத் திட்டங்களை மிகுந்த கவனத்தோடு நடைமுறைப்படுத்தியதை இந்நேரத்தில் நினைவு கூறுகிறேன்.

    குழந்தைகளுக்கெதிரான கொடுமைகள் எக்காலத்திலும் எவ்விடத்திலும் நடைபெறாத நிலையை படைத்திட இந்நன்னாளில் உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். #ChildrensDay #TTVDhinakaran
    ஜவகர்லால் நேருவின் 129வது பிறந்தநாளையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை செலுத்தினர். #JawaharlalNehru #ChildrensDay #SoniaGandhi
    புதுடெல்லி:

    நாட்டின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேருவின் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவரது திருவுருவச் சிலைகள் மற்றும் திருவுருவப்படங்கள் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.



    டெல்லியில் உள்ள நேரு நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் பல்வேறு தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

    இதேபோல் காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில அலுவலகங்கள், கிளை கமிட்டி அலுவலகங்கள் என அனைத்து பகுதிகளிலும் நேருவிற்கு மரியாதை செலுத்தப்பட்டது. #JawaharlalNehru #ChildrensDay #SoniaGandhi
    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ஓவிய போட்டி பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் நேற்று நடந்தது.
    பெரம்பலூர்:

    குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ- மாணவிகளுக்கான ஓவிய போட்டி பெரம்பலூர் அருகே உள்ள அரணாரை கிராமத்தில் நேற்று நடந்தது. போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு இயற்கை தொடர்பான ஓவியங்களை ஆர்வத்துடன் வரைந்தனர். இதையடுத்து நடந்த பரிசளிப்பு விழாவிற்கு மழலையர் முன்னேற்ற மன்றத்தின் தலைவர் மகாலட்சுமி தலைமை தாங்கினார்.

    சமூக ஆர்வலர் முகம்மது இக்பால் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக தனியார் பள்ளியின் தாளாளர் மங்கை விஜயா, கல்லூரி பேராசிரியை செல்வி ஆகியோர் கலந்து கொண்டு ஓவிய போட்டியில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ- மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினர். மேலும் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டு சான்றிதழ்வழங்கப்பட்டது.
    ×